இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.  முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுஇந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.


இந்திய அணியின் அறிமுக வீரர் ஆகாஷ் தீப்பின் அசத்தலான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது. முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாம் நாளில் அந்த அணி 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் விளாசினார்.






பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய  இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 73 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் சேர்த்தது.  துருவ் ஜுரேல் 30 ரன்களுடனும் குல்தீப் யாதவ் 17 ரன்களும் களத்தில் இருந்தனர்.


இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 103.2 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களும், துருவ் ஜூரல் 90 ரன்களும் விளாசினார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி தரப்பில் சோஹைப் பஷீர் அதிகப்பட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.