இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் ஏற்கனவே 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 2 போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 4வது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 


முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி போட்டியின் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 46 ரன்கள் முன்னிலையில் இருந்தபடி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான்களான அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவினைச் சந்தித்தது. 


இங்கிலாந்து அணி சார்பில் குறிப்பிடும் படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியவர்கள் என்றால் அது தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கார்லி 60 ரன்களும் அனுபவ வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களும் சேர்த்ததுதான். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் சேர்த்தபோது 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னர் கைகோர்த்த இங்கிலாந்து அணியின் பென் ஃபோக்ஸ் மற்றும் ஷோயிப் பஷிர் கூட்டணி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு சவால் அளித்தனர். இவர்கள் இருவரும் 64 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இவர்களின் கூட்டணியைப் பிரிக்க இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னிடம் இருந்த சுழற்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து பயன்படுத்திவந்தார். இறுதியில் இவர்கள் கூட்டணியை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அப்போது இந்த கூட்டணி 74 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 191 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது ஆல் அவுட் ஆனது. 192 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கவுள்ளது. 


இங்கிலாந்து அணி தனது 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் கைப்பற்றியுள்ளனர். அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.