நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. நான்காவது நாளான இன்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் சாஹா 61* ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் வில் யங் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 417 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மேலும் மற்றொரு ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்கள் என்ற சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 13ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில்தேவ் இரண்டாம் இடத்திலும், கும்ப்ளே முதலிடத்திலும் உள்ளனர்.
இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:
வீரர்கள் | டெஸ்ட் போட்டிகள் | விக்கெட்கள் |
அனில் கும்ப்ளே | 132 | 619 |
கபில்தேவ் | 131 | 434 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 80* | 417 |
ஹர்பஜன் சிங் | 103 | 417 |
நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி நாள் ஆட்டத்தில் அஸ்வின் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில் ஹர்பஜன் சிங்கை தாண்டி இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை தன்வசமாக்கிவிடுவார் என்பது குறிப்படத்தக்கது.
மேலும் படிக்க: சஹாவின் சாகச '60'... 234/7 டிக்ளர் செய்த இந்தியா... நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு..