நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், 63 ரன்கள் முன்னிலையுடன் நான்காவது நாளான இன்று இந்திய அணி ஆட்டத்தை தொடங்கி ஆடி வருகிறது.
இந்திய அணி இன்று தொடக்கம் முதலே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாயங்க் அகர்வால் 17 ரன்களில் வெளியேற, இந்திய அணியில் தற்போது சுவராக காணப்படும் புஜாராவும் 22 ரன்களில் நடையை கட்டினார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 4 ரன்களில் ஏமாற்றம் அளிக்க, கடந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஜடேஜா இந்த முறை ரன் எண்ணிக்கையை தொடங்காமலே அவுட் ஆனார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன் அஸ்வின் இணைந்து இந்திய அணியின் எண்ணிக்கையை உயர்த்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஜெமிசன் வீசிய 39. 2 வது ஓவரில் அஸ்வின் ஆப் சைடு அடிக்க முற்பட்டு அந்த பந்து அவரது முன் காலில் பட்டு, தந்திரமாக பெயில்களில் மீது விழுந்தது.
இதன்மூலம், அஸ்வின் எதிர்பாராத விதமாக 32 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அஸ்வின் அவுட் ஆனது கூட தெரியாமல் ஜெமிசன் நின்று இருந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது, இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180ரன்கள் அடித்துள்ளது. விக்கெட் கீப்பர் சஹா 30 ரன்களுடனும். அக்சர் பட்டேல் 5 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்