மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் நேற்று முன் தினம் விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, மூன்றாவது நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது. கடந்த போட்டியில் 150 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் தொடர்ந்து நேற்றும் சிறப்பாக ஆடினார். இந்திய அணி 276 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, மூன்றாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. இந்நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இன்று இந்திய அணி களம் இறங்கியது.
இன்று போட்டி தொடங்கிய 45 நிமிடங்களுக்குள் ஜெயந்த யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 விக்கெடுகள் விழ, கடைசியாக அஷ்வின் பந்துவீச்சில் 10வது விக்கெட் விழுந்து போட்டியும் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் 60 ரன்களும், நிகோலஸ் 44 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்களும், அக்சர் 1 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தார். 2 வது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 150 மற்றும் 62 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை அள்ளிய அஸ்வின் தொடர் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2021-23 புள்ளிப்பட்டியலில் 58.33 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த தொடரை இழந்ததன் மூலம், நியூசிலாந்து அணி 16.66 சதவீத புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது.
அதேபோல், ஐசிசி டெஸ்ட் புள்ளி பட்டியலில் இந்த தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. நியூசிலாந்து அணி 5 புள்ளிகள் குறைந்து 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்