இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது. அத்துடன் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தன்னுடைய 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது ஒரு கிரிக்கெட் வீரராக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ள முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 2008ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி வருகிறார். அதேபோல் 2010ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளிலும், 2011ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கி வருகிறார். கிட்டதட்ட 13ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் விராட் கோலி இந்தச் சாதனையை படைத்துள்ளார். 

 

விராட் கோலியின் வெற்றி விவரம்:

கிரிக்கெட் வகை போட்டிகள்  வெற்றிகள்
ஒருநாள்  254   153
டெஸ்ட்         97   50
டி20           95     59

 

ஆக மொத்தம் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிக்கு மேல் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அடுத்து வரும் டிசம்பர் 26ஆம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. ஆகவே அங்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க: ஒரு வெற்றி... பல படிகளை கடந்த இந்தியா... ஐசிசி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்!