இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:
அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த போட்டி நாளை (செப்டம்பர் 19) ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிசிசிஐ மூத்த வீரர்களுக்கான ஒரு சிறப்பு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. அதன்படி, இந்திய அணியின் மூத்த வீரர்கள் சென்னைக்கு வந்து சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்?
இச்சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக். இவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தான். இதுவரை ரோஹித் ஷர்மா 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். அதேபோல் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 78 சிக்ஸர்களை குவித்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 69 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 64 சிக்சர்களை அவர் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 61 சிக்ஸர்கள் விளாசி இருக்கிறார். ஏழாவது இடத்தில் இருக்கும் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.