இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:


அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.


இந்த போட்டி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிசிசிஐ மூத்த வீரர்களுக்கான ஒரு சிறப்பு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. அதன்படி, 5 நாட்களுக்கு முன்னதாகவே இந்திய அணியின் மூத்த வீரர்கள் சென்னைக்கு வந்து சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


கே.எல்.ராகுல் களம் இறங்குவாரா?


இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கே.எல்.ராகுல் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்குவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா,"கேஎல் ராகுல் உடைய திறமை என்ன என்று எங்களுக்கு தெரியும்.


உலகிலேயே மிகச் சில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே தங்கள் கிரிக்கெட் வாழ்வில் சுமுகமான நிலையில் இருந்துள்ளனர். மற்ற அனைவருக்கும் மேடு, பள்ளங்கள் நிச்சயம் இருந்துள்ளது. நாங்கள் கே எல் ராகுலுக்கு தெளிவான செய்தியை கூறி இருக்கிறோம். அவர் அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும். அதுதான் எங்களுக்கு தேவை"என்று ரோஹித் ஷர்மா பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர்,"அவர் தென்னாப்பிரிக்காவில் அபாரமாக ஆடினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 80 ரன்கள் சேர்த்தார். அதை வைத்து அவரது திறமையை நாங்கள் கண்டு கொள்ள முடியும். அதே சமயம், நாங்கள் சரியான செய்தியை அவருக்கு சொல்ல வேண்டும் என்பதும் முக்கியம். அவர் இனியும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம். ஸ்பின்னர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் நல்ல ஆட்டத்தை வைத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாட மாட்டார் என சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை"என்றார்.