ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அர்ஷ்தீப் சிங், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஜாகீர் கான், நெஹ்ரா மற்றும் இர்பான் பதான் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு பிறகு இந்திய அணிக்காக இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகமானார்.


இதுவரை இவர் இந்தியாவிற்கு ஒரு சிறந்த பந்து வீச்சாளராக நிரூபித்துள்ளார். ஆனால் எந்த பந்து வீச்சாளரும் செய்ய விரும்பாத சில மோசமான சாதனைகளை தனது பெயரில் படைத்துள்ளார். அதன்படி,  தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பெயரில் அதிக வைட் பந்துகளை வீசிய சாதனையை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் தனது பெயரில் இந்த மோசமான சாதனை படைத்தார். 


மோசமான சாதனை:


கடந்த 2022 முதல், அர்ஷ்தீப் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வைட் பந்துகளை வீசிய பவுலர் ஆனார். வைட் பந்துகளை வீசியதில் அரை சதத்தை கடந்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் அயர்லாந்தின் மார்க் அடேரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். முன்னதாக, அடேர் 50 வைட் பந்துகளை வீசி முதலிடத்தில் இருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் 51 வைட் பந்துகளை வீசி முன்னேறினார்.  இந்த பட்டியலில் 39 வைட் பந்துகளை வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


இவர்களை தொடர்ந்து, மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோமரியோ ஷெப்பர்ட் 34 வைட் பந்துகளுடன் நான்காவது இடத்திலும், இந்திய அணி சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் 29 வைட் பந்துகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 


2022 முதல் அதிக வைட் பந்துகளை வீசிய பந்து வீச்சாளர்கள்:


51 - அர்ஷ்தீப் சிங்
50 - மார்க் அடேர்
39 - ஜேசன் ஹோல்டர்
34 - ரொமாரியோ ஷெப்பர்ட் 
29 - ரவி பிஷ்னோய்.


இரண்டாவது டி20யில் 3 விக்கெட்டுகளை அள்ளிய அர்ஷ்தீப்  சிங்:


இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 2022-க்குப் பிறகு அதிக வைட் பந்துகளை வீசியவர் என்ற சாதனையை அர்ஷ்தீப் வைத்திருந்தாலும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அர்ஷ்தீப் சிங் நேற்றைய போட்டியில் நஜிபுல்லா சத்ரான், கரீம் ஜனத் மற்றும் நூர் அகமது ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


2வது டி20 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி:


டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்த குல்பாடின் நைப் அதிகபட்ச ரன்களை எடுத்திருந்தார். இது தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் 30 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. 


173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிபம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்திருந்தனர்.