நேற்று இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டில் பெவிலியன் திரும்பினார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி வீசிய முதல் ஓவரின் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரோஹித் சர்மா அவுட்டானார். இந்த தொடரின் முதல் போட்டியில் அதாவது மொஹாலி டி20 போட்டியில் கூட ரோஹித் சர்மா, இதேபோல் பூஜ்ஜியத்தில் அவுட்டானார். பேக் டூ பேக் போட்டிகளில் டக் அவுட் ஆனது மூலம், ரோஹித் சர்மா டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது அதிக முறை டக் அவுட்டில் வெளியேறிய சாதனை இதுவாகும். 






ரோஹித் சர்மா இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில் 12 முறை பூஜ்ஜியத்தில் அவுட்டாகியுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை பூஜ்ஜியத்தில் பெவிலியன் திரும்பியதன் அடிப்படையில் ரோஹித் சர்மா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 


இந்த பட்டியலில் அயர்லாந்து வீரர் பால ஸ்டிர்லிங் முதல் இடத்தில் உள்ளார். பால் இதுவரை 13 முறை பூஜ்ஜியத்தில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்திற்கு வருவதற்கு ரோஹித் சர்மா இன்னும் வெகு தொலைவில் இல்லை. இனி வரும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் கூட டக் அவுட்டானால், பால் ஸ்டிர்லிங்கை சமன் செய்வார். 






நீண்ட இடைவேளைக்கு பிறகு டி20 போட்டிக்கு திரும்பிய ரோஹித் சர்மா:


ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு, டி20 சர்வதேச டி20 போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தேர்வானது மூலம் வருகின்ற டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, இவர் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். அதாவது ஒரு வருடத்திற்கு மேலாக சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். 2024 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, இந்திய தேர்வாளர்கள், இந்திய டி20 அணியில் தேர்வு செய்துள்ளனர். 


150 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்: 


இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியிலும் ரோஹித் சர்மா பெரிய சாதனை படைத்தார். 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். ரோஹித் இதுவரை 150 டி20 சர்வதேச போட்டிகளில் 30.82 சராசரி மற்றும் 139 ஸ்டிரைக் ரேட்டில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். டி20யில் 4 சதங்கள், 29 அரைசதங்கள் அடித்துள்ளார்.


போட்டி சுருக்கம்:


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசாத்திய முன்னிலை பெற்றுள்ளது. இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 26 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் அர்ஷ்தீப், அக்ஷர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர்.