3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. 


இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். 


173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியிலும் தனது கணக்கு திறக்காமல் வெளியேறினார்.ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளிக்க, முதல் ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்தது.


அடுத்ததாக உள்ளே வந்த விராட் கோலி, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷிப் வைத்து சிறப்பாக ஆட தொடங்கினார். இவர்கள் இருவரும் அதிரடியை தொடர, வெறும் 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது. அப்போது ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 33 ரன்களும், கோலி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 






தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 29 ரன்கள் எடுத்த நிலையில்  பெவிலியன் திரும்பினார். மறுபுறம் விக்கெட் விழுந்தாலும் அசராமல் அசுர அடி அடித்த ஜெய்ஸ்வால், 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். துபேயும் சிறப்பாக பேட்டிங் செய்து 13 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க, இந்தியாவின் ஸ்கோர் 9.3 ஓவர்களில் 100ஐ தாண்டியது. தொடர்ந்து இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை வான வேடிக்கையாக தெறிக்கவிட்டு கொண்டு இருந்தனர். 


உள்ளே வந்ததும் முதல் டி20 போட்டியில் காட்டிய அதிரடியை சிவம் துபே, இந்த 2வது டி20 போட்டிகளிலும் தொடர்ந்தார். அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை அடித்து ஆப்கானிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை உடைத்தார். சிவம் துபே 21 பந்துகளில் அரைசதம் அடிக்க,  இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. 


தொடர்ச்சியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உதவியுடன் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 


36 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ரிங்கு சிங் உள்ளே வந்ததுடன் பவுண்டரியை ஓடவிட்டார். தொடர்ந்து மீதமுள்ள ரன்களை துரத்து, 26 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி வெற்றிபெற்றது. 


கடைசி வரை ஆட்டமிழக்காமல் துபே 63 ரன்களுடனும், ரிங்கு சிங் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்களும், நவீன் உல் ஹக் மற்றும் பரூக்கி தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.