இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதன்காரணமாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது இந்திய அணி. தோல்விகளால் எழுந்த விமர்சனங்கள் காரணாக, ஏற்கனவே டி20, ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில், டி20, ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற விவாதம் பேசு பொருளாகியுள்ளது. மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை அணி, டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்குள், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனை அறிவிக்கும் முனைப்பில் பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ரோஹித் ஷர்மாதான் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது. இருப்பினும், மற்ற அணிகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டு வெற்றிகளை குவித்து வருவதால், இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளரை டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கலாம் என யோசனையில் பிசிசிஐ இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஏற்கனவே துணை கேப்டனாக செயல்பட்டிருக்கும் பும்ராவின் பெயர் முதலில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், சீனியர் வீரர் என்ற முறையில் ஷமிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஷமி, “கேப்டன் பொறுப்பை பற்றி இப்போது எதுவும் பெரிதாக யோசிக்கவில்லை. எனக்கு எந்த பொறுப்பு தந்தாலும் அதை செய்ய தயாராக இருக்கிறேன். இந்திய அணியை வழிநடத்திச் செல்ல யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால், அது மட்டுமே குறிக்கோள் கிடையாது என்னால் முடிந்த வரை இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்பதே என் திட்டம்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இந்திய அணி 2021-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அத்துடன் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் ஆண்டை நிறைவு செய்து அசத்தியது. இந்தச் சாதனையை தொடர்ச்சியாக இந்திய அணி 6 ஆவது ஆண்டாக நிகழ்த்தியிருந்தது. 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க தொடரில் அடைந்த இரண்டு டெஸ்ட் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது. எனினும் அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்