நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸின் போது நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லெதம் விக்கெட்டை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் வீழ்த்தினார். அதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவர் தன்னுடைய 418ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜனை சிங்கை தாண்டினார். ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட் வீழ்த்திருந்தார். தற்போது அதனை அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளிலேயே தாண்டியுள்ளார். மேலும் இந்த டெஸ்ட் போட்டியின் முடிவில் அஸ்வின் மொத்தம் 419 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அஸ்வினை புகழ்ந்தார். அதில்,”ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக விளையாடிய சிறப்பான பந்துவீச்சாளர். நான் அவருடன் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவருடைய சாதனையை 80 டெஸ்ட் போட்டிகளில் கடக்க முடியும் என்றால் அது அஸ்வினால் மட்டும் தான் முடியும். ஏனென்றால் ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் அஸ்வின் தன்னை நன்றாக மெருகேற்றி வருகிறார். இதனால் தான் அவர் தற்போதும் இந்திய அணிக்கு ஒரு மேட்ச்வின்னராக இருந்து வருகிறார். இந்தப் போட்டியிலும் இந்தியாவிற்கு தன்னுடைய அசத்தலான பந்துவீச்சின் மூலம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்” எனக் கூறி புகழ்ந்துள்ளார்.
முன்னதாக தன்னை தாண்டிய அஸ்வினிற்கு ஹர்பஜன் சிங் ட்விட்டரில் ஒரு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், "வாழ்த்துகள் அஸ்வின். இன்னும் நீங்கள் நிறையே விக்கெட்டை எடுக்க வேண்டுகிறேன். ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கட்டும். இதேபோல் சிறப்பாக பந்துவீசுகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 13ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில்தேவ் இரண்டாம் இடத்திலும், கும்ப்ளே முதலிடத்திலும் உள்ளனர்.
இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:
| வீரர்கள் | டெஸ்ட் போட்டிகள் | விக்கெட்கள் |
| அனில் கும்ப்ளே | 132 | 619 |
| கபில்தேவ் | 131 | 434 |
| ரவிச்சந்திரன் அஸ்வின் | 80* | 419 |
| ஹர்பஜன் சிங் | 103 | 417 |
மேலும் படிக்க: ஆடுனது ஒரு டெஸ்ட்.. அதுக்குள்ள இத்தனை ரெக்கார்டு.. இன்று ஒரு புதிய சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !