ஆசிய கோப்பைத் தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அணிக்கு ரோகித்சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளிக்க, விராட்கோலியின் அபார அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களை எடுத்தது.


மோசமான பார்ம் காரணமாக தொடர்ந்து சொதப்பி வந்த விராட்கோலி, ஒரு மாத இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியதால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 35 ரன்கள் விளாசிய விராட்கோலி அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி அளித்துள்ளார்.




இந்த நிலையில், இன்றைய போட்டியில் விராட்கோலி மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட்கோலி சர்வதேச டி20 போட்டிகளில் தனது 32வது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.


தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் விராட்கோலி மீண்டும் தன்னுடைய சாதனைகள் மூலம் பதிலடி தருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 102 டி20 போட்டிகளில் ஆடியுள்ள விராட்கோலி இதுவரை 32 அரைசதங்களை விளாசியுள்ளார், அதிகபட்சமாக 94 ரன்களை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா உள்ளார். அவர் 135 டி20 போட்டிகளில் ஆடி 31 அரைசதங்களை விளாசியுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 27 அரைசதங்களுடன் உள்ளார்.




மேலும், இன்றைய போட்டியில் விராட்கோலி டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலை முந்தியும் சாதனை படைத்தார்.