ஆசிய கோப்பையில் இந்திய அணி இன்று பாகிஸ்தான் அணியுடன் சூப்பர் 4 சுற்றில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. இந்தியாவின் சார்பில் பேட்டிங்கைத் தொடங்கிய கேப்டன் ரோகித்சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாகவே ஆட்டத்தை தொடங்கினர்.




கேப்டன் ரோகித்சர்மா பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம்ஷா வீசிய முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். இதனால், முதல் ஓவரிலே இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. பவர்ப்ளேவில் இந்திய அணி அதிரடியாகவே ஆட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய வீரர்கள் ரோகித்சர்மாவும், கே.எல்.ராகுலும் உள்ளே வந்தனர் என்பது அவர்கள் ஆடிய விதத்தை பார்த்தபோதே தெரிந்தது.






ரோகித்சர்மா பவுண்டரி, சிக்ஸர் என்று விளாச அவருக்கு மறுமுனையில் நின்ற கே.எல்.ராகுலும் பவுண்டரி, சிக்ஸருக்கு மாறினார். இருவரும் இணைந்து 3 ஓவர்களில் 34 ரன்களை விளாசினர். இவர்களது அதிரடியை கண்டு மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இவர்களது அதிரடியை கண்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 5வது ஓவரிலே சுழற்பந்துவீச்சை அழைத்தார். இந்திய அணி 4.2 ஓவர்களில் 50 ரன்களை விளாசியது.


 






இந்திய அணிக்காக அதிரடி காட்டிய ரோகித்சர்மா பவர்ப்ளேவின் கடைசி ஓவரான 6வது ஓவரில் அதிரடி காட்ட முயற்சித்தார். ஹரிஷ் ராஃப் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலே ரோகித்சர்மா சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால், அவர் அடித்த பந்து சரியாக கிளிக் ஆகாததால் கேட்ச்சாக மாறியது. நல்ல உயரத்திற்கு சென்ற அந்த பந்தை குஷ்தில் ஷா அபாரமாக கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச்சை பிடிப்பதற்கு பகார் ஜமானும் வந்த நிலையில், குஷ்தில்ஷா அபாரமாக பிடித்தார். ரோகித்சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் விளாசி வெளியேறினார். இந்திய அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் 62 ரன்கள் விளாசியது.


இந்திய அணி பவர்ப்ளேவில் காட்டிய அதிரடியை அடுத்த ஓவர்களிலும் எடுத்துச்செல்ல முற்பட்ட கே.எல்.ராகுல் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஷதாப்கான் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆட முயற்சித்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் அவுட்டானார். இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் விளாசியது.