இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ்சிங். முன்னாள் வீரரான இவரது அபாரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது.

தோனி? கோலி? ரோகித்?


இந்திய அணிக்காக ஏராளமான போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத்தந்த யுவராஜ்சிங்கிடம் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் டி20 போட்டி ஒன்றிற்கு விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகிய 3 பேரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஒருவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும். மற்ற ஒருவரை விற்க வேண்டும் என்றால் யாரை எதற்கு தேர்வு செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.


அதற்கு பதில் சொன்ன யுவராஜ்சிங்,  “ நான் ரோகித் சர்மாவையே தேர்வு செய்வேன். அவர் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆக்ரோஷமாக பேட் செய்யக்கூடியவர். ரோகித் சர்மா ஒரு தலைசிறந்த கேப்டன் மற்றும் வெற்றிகரமான தலைவரும் ஆவார்.


விராட் கோலி மற்றும் தோனி இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வது தலைப்புச் செய்திகளில் இடம்பெறச் செய்துவிடும். அது நடக்க நான் விரும்பவில்லை. அதனால் என்னை நானே பெஞ்சில் உட்கார வைத்துக் கொள்வேன்” இவ்வாறு அவர் கூறினார்.


 வாகனின் தேர்வு யார்?


இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனிடம் இதே கேள்வி கேட்கப்பட்போது, அதற்கு அவர் தான் விராட் கோலியை விற்பனை செய்து விடுவேன் என்றும், தோனியை தேர்வு செய்து கேப்டன் ஆக்குவேன் என்றும், ரோகித் சர்மாவை பெஞ்சில் உட்கார வைப்பேன் என்றும் கூறினார். விராட் கோலி எந்த ஐ.பி.எல். கோப்பையையும் வெல்லாத காரணத்தினால் அவரை விற்பனை செய்வதாக கூறினார்.


யுவராஜ்சிங் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 3 பேருடனும் இணைந்து விளையாடியுள்ளார். டிராவிட்டிற்கு பிறகு யுவராஜ்சிங்கிற்கே கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனிக்கு வழங்கப்பட்டது. அதேசமயம், யுவராஜ்சிங் சமீபத்தில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் இந்திய அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிக்ஸர் மற்றும் அதிரடி மன்னன் என்று அழைக்கப்பட்ட யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து டி20 உலகக்கோப்பையில் அசத்தியவர். 42 வயதான யுவராஜ்சிங் 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 1900 ரன்களை எடுத்துள்ளார். 304 ஒருநாள் போட்டிகளில் ஆடி 14 சதங்கள் மற்றும் 52 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 701 ரன்களை எடுத்துள்ளார். 58 டி20 போட்டிகளில் ஆடி 8 அரைசதங்களுடன் 1177 ரன்களை எடுத்துள்ளார். 132 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 750 ரன்களை எடுத்துள்ளார்.


டெஸ்டில் 9 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 111 விக்கெட்டுகளையும், டி20யில் 28 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். தொடரில் 36 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.