இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற மற்றும் முன்னணி சுழற்பந்துவீச்சாளரும், ஆல்ரவுண்டருமான அஸ்வின் ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்திய அணியின் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினின் இந்த ஓய்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஸ்வின் திடீர் ஓய்வு:


ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற அஸ்வின், இந்த தொடர் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் 3வது டெஸ்ட் போட்டி முடிவிலே தனது ஓய்வை அறிவித்தார். மேலும், பிரிஸ்பேன் டெஸ்ட் முடிந்த அடுத்த நாளே சென்னைக்கு திரும்பினார். அவருக்கு அணியில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை, அவர் தரக்குறைவாக நடத்தப்பட்டார் என்று பலரும் குற்றம் சாட்டினர்.


அஸ்வினின் நெருங்கிய நண்பரும், கிரிக்கெட் விமர்சகருமான பிடாக்கும் இதே குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் இதுதொடர்பாக பேசும்போது, அஸ்வின் இந்த துறையில் 14 முதல் 15 ஆண்டுகள் உள்ளார். திடீரென இந்த ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது, அதேநேரம் இது எதிர்பார்த்தது. காரணம் என்னவென்றால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். எவ்வளவு நாள்தான் இதை தாங்கிக்கிக்கொள்வார்? என்றார்.

எங்கப்பாவை மன்னிச்சுடுங்க:


அஸ்வினின் தந்தையே இவ்வாறு கூறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.





அதில் அவர் கூறியிருப்பதாவது,


“ என் அப்பா மீடியாவில் பேசுவதற்கு பயிற்சி பெற்றவர் அல்ல. டே அப்பா என்னடா இதெல்லாம். அப்பா  அறிக்கையை நீங்களும் பின்பற்றுவீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அவரை மன்னித்து தனியே விடுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” இவ்வாறு அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

765 விக்கெட்டுகள்:


தோனியின் கேப்டன்சியில் அனைத்து வடிவத்திலும் ஆடி வந்த அஸ்வின், அதன்பின்பு கோலி மற்றும் ரோகித் கேப்டன்சியில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அழைக்கப்பட்டு வந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் அதிகளவு ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த சூழலில், அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.


2010ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் அஸ்வின் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆவார். அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 503 ரன்களையும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டுகளையும், டி20யில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.