அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தன்னுடைய மகனை நீண்ட காலமாக அவமானப்படுத்தி வந்ததாகவும் எவ்வளவு நாள்தான் அதை சகித்து கொள்ள முடியும் என அவரது தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

அஸ்வினின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன?

அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும் ஆனால், அதே நேரத்தில் அந்த முடிவு வரும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கு பிறகு இந்திய நட்சத்திர சூழற்பந்து வீச்சாளர்ரான ரவி அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. 

குறிப்பாக, தொடரின் நடுவே அவர் ஓய்வை அறிவித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஓய்வு பெற வேண்டும் என அவருக்கு அழுத்தம் தரப்பட்டதாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், அஸ்வினின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

தந்தை குற்றச்சாட்டும் அஸ்வின் மறுப்பும்: 

"அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அதே நேரத்தில் அந்த முடிவு வரும் என நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தேன். என்னுடைய மகனை நீண்ட காலமாக அவமானப்படுத்தி வந்தார்கள். எவ்வளவு நாள்தான் அதை சகித்து கொள்ள முடியும்" என தனியார் செய்தி நிறுவனத்திடம் அஸ்வினின் தந்தை பேசியுள்ளார்.

இந்த நிலையில், தன்னுடைய தந்தை பேசியதற்கு அஸ்வினே விளக்கம் அளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட விளக்கத்தில், "எனது தந்தைக்கு ஊடகத்திடம் எப்படி பேச வேண்டும் என தெரியாது. டேய் தகப்பா என்னடா இதெல்லாம்.

 

அப்பா பேசுவதை எல்லாம் நீங்கள் சீரியஸாக எடுத்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.