Navdeep Saini Wedding: இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் ஷைனி தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நவ்தீப் ஷைனி திருமணம்:
ஹரியானாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் ஷைனி, கடந்த 2019ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் சர்வதேச டி-20 போட்டியில் அறிமுகமானார். இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான ஸ்வாதி அஸ்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதோடு, உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நாளும் அன்பின் நாள். இன்று, நாங்கள் என்றென்றும் ஒன்றாக இருப்பதற்கான முடிவை எடுத்துள்ளோம்! எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் தேடுகிறோம்” என நவ்தீப் ஷைனி பதிவிட்டுள்ளார். இவருக்கு சக வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த ஸ்வாதி அஸ்தனா?
ஃபேஷன், பயணம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற துறைகளில் வெளிக்காட்டும், வி - லாக்கராக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்வாதி அஸ்தனா மிகவும் பிரபலமானவர் ஆவார்.
நவ்தீப் ஷைனியின் கிரிக்கெட் பயணம்:
நவ்தீப் ஷைனி சமீபத்தில் முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்கினார். அரையிறுதியில் பஞ்சாபிடம் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், தொடர் முழுவதும் ஷைனி ஏழு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
அக்டோபர் மாதம் நடந்த இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வெற்றியில் ஷைனி முக்கிய பங்காற்றினார். 2019 ஐபிஎல் சீசன் சிறப்பானதாக இருந்த போதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸுடனான 2023 சீசனில், அவர் இரண்டு போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்.
முக்கியமான டெஸ்ட் போட்டி:
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நவ்தீப் ஷைனியின் கடைசியாக விளையாடியது என்பது, நாட்டின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். 2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இறுதி டெஸ்டில் தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது. இந்திய வீரர்கள் பலர் காயம் காரணமாக விலக ஷைனி கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டார்.
தொடரில் தலா ஒரு வெற்றி என சமநிலையில் இருந்த நிலையில், சிட்னியில் டிரா ஆன மூன்றாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஷைனி அறிமுகமானார். பிரிஸ்பேன் டெஸ்டில் ஷைனி பந்தில் குறைந்த தாக்கத்தையே கொண்டிருந்தாலும், இந்தியாவின் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ஒன்றைப் பெற்ற அணியின் முக்கிய அங்கமாக இருந்தார். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.