மும்பையில் இருந்து மான்செஸ்டர், 4585 மைல் தொலைவில் இருந்தாலும் 2019-ல் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் முடிவை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியா - நியூஸிலாந்து போட்டியின் நடுவே மழை வந்து ஹலோ சொல்லிவிட்டு சென்றது. பெஸ்ட் ஃபினிஷர், best runner between wickets என்று சொல்லப்படும் எம்.எஸ்.தோனியின் ரன் அவுட், இந்தியா 18 ரன்னில் தோல்வியடைந்தது என எல்லாமே ரணமாகிய நினைவுகள்... ஆனால், பை பை ஓல்ட் மெமரீஸ் என சொல்லும் அளவிற்கு இந்தியா வெற்றி பெற்று உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது ஸ்வீட்டஸ்ட் நினைவுகளாக நிலைத்திருக்கும். 2023-ம் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான நினைவாகிப்போகும். 


கிரிக்கெட் உலகக் கோப்பையின் கடந்த எடிசனில் சோகத்துடன் வெளியேறிய இந்திய அணி, இந்த முறை தங்கள் மிரட்டலான ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணியை பழி தீர்த்தாக குறிப்பிட்டு பலரும் கொண்டாடி வருகின்றனர். இறுதிப்போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருக்கும் நிலையிலும், இன்னும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வென்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த எடிசனில் எவ்வளவு சோகம் நிரம்பியிருந்ததோ இம்முறை மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நிலை. சமூக வலைதளத்தில் இந்தியா வெற்றிக்கு பல் மீம்ஸ்கள் வலம் வந்தன. பலரும் நியூசிலாந்து அணியை திணறடித்த இந்திய அணியை போற்றும் விதமாக பிரபலமான சினிமா காட்சிகளை பதிவிட்டனர்.


இந்த அரையிறுதியில் இந்தியா சார்பில் முகமது ஷமியின் ராஜ்ஜியம்தான். 9.5 ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஹீரோ. 2011-ல் வான்கடே மைதானத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதே மைதானத்தில் இம்முறை 70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது போல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வென்றுவிட்டால் திருவிழா முழுமையான மகிழ்ச்சியுடன் நிறைவடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 


இந்தியா - நியூசிலாந்து அணி மோதிய உலகக் கோப்பை அரையிறுதி போட்டி அழகான திரைக்கதை என்று கூட சொல்லலாம். இந்திய அணிக்கு ஃபேவரைட் மைதானம், வான்கடே. டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தது, டீசண்ட் ஸ்கோருக்கான தொடக்கமாக நல்ல ஓப்பனிங் என எல்லாம் இந்தியாவிற்கு சாதகமாகவே அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித், கில் நன்றாக விளையாடினர். அணி 71- ரன்னை எட்டியபோது ரோகித் அவுட் ஆனது வருத்தம் என்றாலும். அடுத்த விக்கெட் 327-வது ரன்னில்தான்.. விராட் கோலி, ஸ்ரேயாஸ் சதம், சுப்மன் கில் 80 ரன்னில் நாட்- அவுட் என இந்திய அணி ஆட்டத்தில் மிரட்டியது. இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் நியூசிலாந்திற்கு இலக்காக நிர்ணயித்தது.


தொடக்கத்தில் நிதானமாக ஆடிய நியூசிலாந்து அணியின் கான்வே,ரச்சிங் ரவீந்திரா என முக்கியமான விக்கெட்களை பவர்-ப்ளேயில் எடுத்து அசத்தினார் முகமது ஷமி. மறுபுறம் டேரில் மிட்செல்லும் கேன் வில்லியம்சனும் கூட்டணி அணியின் வெற்றிகாக ரன் சேர்க்க தொடங்கியது. இருவரும் 181 ரன் சேர்த்தனர். பவுலிங், ஃபீல்டிங் இந்தியாவும் கொஞ்சம் சொதப்பிய பொழுது அது நடந்தது. டேரில் மிட்செல் ஆட்டம் இந்த முறையும் போயிடுமோ என்ற எண்ணம் மேலிட்டபோது கேன் வில்லியம்சன் அவுட். பின்னர், ஆட்டத்தை முகமது ஷமி கையிலெடுத்தார். டேரில் மிட்செல் 134-ல் ரன்னில் ஆட்டமிழந்தார். போட்டியை வென்றுவிடலாம் என்று நினைத்த நியூசிலாந்து அணியின் கனவை முகமது ஷமி சிறப்பான பந்து வீச்சால் தகர்த்தார். நியூசிலாந்தின் போராட்டம் வெற்றிக்கு உதவவில்லை. இப்படி ஒரு த்ரிலிங்கான கதையை சமூக வலைதளத்தில் கிரி படத்தில் வரும் ’எத்தனை பேரு அடிச்சாலும் தாங்குறான்’ காமெடில வரும் வகையில் ஒரு பதிவு அனைவரையும் ஈர்த்து வருகிறது. 


நீங்களே படிச்சி பார்த்து சிரிங்களேன் :)


எத்தனை பேருங்க அடிச்சாங்க.... 
முதல்ல ரோகித் அடிச்சாம்மா
அப்புறம் கில் அடிச்சாம்மா
அப்புறம் கோலி அடிச்சாம்மா
சரி இவனுங்களை அவுட்டாகிட்டால்
போதும்டான்னு பாத்தால்
ஸ்ரேயஸ் அய்யர்ன்னு ஒருத்தன்
வந்தாம்மா அவன் பேட்டுல 
அடிச்சானா இல்லை ராக்கெட்ல
அடிச்சானுன்னு தெரியலை
அந்த அடி அடிக்கிறான் 
சரி அடிச்சிட்டு போங்கடான்னு 
விட்டுட்டு பேட்டிங் செஞ்சால்
சமின்னு ஒருத்தன் பந்து போட
 வந்தாம்மா அவன் பந்து போடுறானா
இல்லை அணுகுண்டுகளை
 போடுறனான்னு தெர்லம்மா 
யாரையும் விட்டு வைக்கவே இல்லை அவன் பாட்டுக்கு போட்டுட்டே இருக்கான் மொத்தமா 7 பேரை
அவுட்டாக்கிட்டு சாதாரணமா 
சிரிச்சிட்டு போயிட்டே இருக்கான்மா
அப்புறம் அந்த கீப்பர் நின்னானே
ராகுல்ன்னு ஒருத்தன் அவன் க்ரௌண்ட்ல விழுந்து பந்தை புடிக்கிர மாதிரியே புடிக்கலைம்மா எங்க பந்து போனாலும் நீச்சல் குளத்தில் குதிக்கிர மாதிரி நீண்டு நீண்டு உழுந்து உழுந்து பந்தை புடிச்சிட்டே இருக்கான்மா
அப்புறம் அந்த ஜடேஜான்னு ஒருத்தன்மா அவன் எங்க நின்னாலும் அவன்கிட்டயே பந்து போகுதும்மா கோழிகுஞ்சை கழுகு தூக்குர மாதிரி
கேட்ச் புடிச்சிட்டே இருக்கான்மா... எங்கள வச்சி செஞ்சுட்டானுங்க...”


இப்படி எழுதிய பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வரும் ஞாயிறு இந்தியாவிற்கான நாளாகுமா? என்ற எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இல்லை.