இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவை ’இந்திய கிரிக்கெட் வீரர்’ என்றிலிருந்து ‘இந்தியன்’ என மாறினார். அதனால் தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார். 


தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியில் இவர் இடம்பெறவில்லை. அதன்பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியிலும் புவனேஷ்வர் குமார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக புவனேஷ்வர் குமாரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை கேள்விகுறியாக உள்ளது. 






33 வயதான புவனேஷ்வர் குமார் கடைசியாக நவம்பர் 2022 ம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியாவிற்காக விளையாடினார். அதன்பின் நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவரின் பெயரை தேர்வுக் குழு பரிசீலனை செய்யவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 2 போட்டிகளுக்கு தலைமை தாங்கியும், 14 போட்டிகளிலும் விளையாடினார். 


புவனேஷ்வர் குமாரின் கடைசி ஒருநாள் போட்டி 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போலண்ட் பார்க்கில் களமிறங்கினார்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளிலும் விளையாடிய நிலையில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. 


ஓய்வு பெறுகிறாரா புவனேஷ்வர் குமார்..? 


இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 40 வயதினை கடந்தும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 33 வயதே ஆன புவனேஷ்வர் குமார் ஓய்வு பெற பிசிசிஐ எண்ண வைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 


நேற்று புவனேஷ்வர் குமார் தனது இன்ஸ்டாகிராம் பயோவை “இந்திய கிரிக்கெட் வீரர்” என்பதில் இருந்து “இந்தியன்” என்று மாறினார். இதனால், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற போகிறார் என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






கடந்த சில ஆண்டுகளாக புவியின் பந்துவீச்சு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. டி20 மற்றும் ஒருநாள் வடிவத்தில் இந்தியாவிற்கு ஸ்விங் ராஜாவாகக் கருதப்பட்டார். புவனேஷ்வர் சில காலமாக டீம் இந்தியாவின் மிக முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார். இந்தியாவிற்காக இதுவரை இவர், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் போது, ​​ஒரு போட்டியில் 96 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஆட்டமாகும். புவனேஷ்வர் 121 ஒருநாள் போட்டிகளில் 141 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 87 டி20 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கிலும் புவனேஷ்வர் திறம்பட செயல்பட்ட இவர், இதுவரை 160 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.