உலக கிரிக்கெட் அணிகளில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் அணிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணி சவால் மிகுந்த அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக இந்திய அணியின் செயல்பாடு இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் அதளபாதாளத்திற்குச் சென்று விடுகிறதோ? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான பயிற்சியாளர் ஆகிறாரா கம்பீர்?
2000ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு பயிற்சியாளராக பதவி வகித்த ஒவ்வொருவரின் பயிற்சியிலும் இந்திய அணி வளர்ச்சி மேல் வளர்ச்சி அடைந்தது. ஜான் ரைட், கேரி கிரிஸ்டன், டங்கன் ப்ளட்செர், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் என ஒவ்வொருவரின் பயிற்சியில் கீழும் பல வரலாற்று வெற்றிகளை இந்திய அணி பெற்றது. இடையில் கிரேக் சேப்பல் பயிற்சியின்போதுதான் இந்திய அணியில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது.
ஐ.பி.எல். பட்டத்தை வென்று தந்த காரணத்தால் அணிக்கு பயிற்சியாளராக அழைத்து வரப்பட்ட கவுதம் கம்பீர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அவரது செயல்பாட்டின் கீழ் இந்திய அணியின் செயல்பாடுகள் மிக மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
27 ஆண்டுகளுக்கு பிறகு பறிபோன இலங்கைத் தொடர்:
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம் பயிற்சியாளராக பயணத்தை தொடங்கிய அவர் சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கி ஹர்திக் பாண்ட்யா பதவியை பறித்தார். ஆனாலும், அந்த தொடரை இந்திய அணி வென்றது. அதன்பின்பு, ரோகித், கோலி ஆகியோர் அடங்கிய பலமிகுந்த இந்திய அணி இலங்கையை ஒருநாள் தொடரில் எதிர்கொண்டது.
அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா பறிகொடுத்தது. 1997ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்று புது வரலாறு படைத்தது. கோலி, ரோகித் இருந்தும் அந்த தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது பெரும் சோகம் ஆகும். 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு எதிராக இந்திய அணி தொடரை இழந்தது.
முதன்முறை பறிபோன 30 விக்கெட்டுகள்:
இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை 30 விக்கெட்டுகளையும் இழந்தது கிடையாது. ஆனால், கம்பீர் பயிற்சியின் கீழ் ஆடிய இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரிலே 3 போட்டிகளிலுமே 30 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இதுவே முதன்முறை ஆகும்.
45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு போட்டியில் கூட வெல்லாத இந்தியா:
45 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஒரு வருடம் கூட ஒரு ஒருநாள்போட்டி வெற்றி பெறாமல் இருந்தது இல்லை. ஆனால், இந்த 2024ம் ஆண்டில் இந்திய அணி இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டி கூட வெற்றி பெறாமல் போன மோசமான வரலாறு இந்தாண்டு அரங்கேறியுள்ளது.
36 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தோற்ற இந்தியா:
நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோற்றது. 36 ஆண்டுகளாக இந்திய மண்ணில் வெற்றியே பெற்றதில்லை என்ற மோசமான வரலாற்றிற்கு நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அணியும் தனது சாதனையை பறிகொடுத்தது.
12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் 2 டெஸ்டில் தோல்வி:
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளையும் இழந்ததால் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டியில் தோற்று மோசமான சாதனையை படைத்துள்ளது.
சொந்த மண்ணில் 50க்கும் குறைவான ரன்:
ரோகித், விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், சர்பராஸ் கான் என வலுவான பேட்டிங் வரிசையுடன் களமிறங்கிய இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 46 ரன்னுக்கு ஆல் அவுட்டானது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் அணியின் அசுர வளர்ச்சிப்பாதையில் கடந்த ஜூலை மாதம் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனார் கம்பீர். ஆனால், கடந்த 4 மாதத்தில் கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை இல்லாத மோசமான சாதனைகளை படைத்து வருகிறது. மேலும், வீரர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், கம்பீரின் பயிற்சியின் மீது பெரிய கேள்வி எழுந்துள்ளது.