Yashasvi Jaiswal: இந்திய வீரர் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் படைத்துள்ள, புதிய வரலாறு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


தனிநபராக போராடிய ஜெய்ஸ்வால்:


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர 2-0 என கைப்பற்றி அசத்தியது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்திய அணி, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. மேலும், நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். இதனிடையே, புனே டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் அனைவருமே சொதப்பினாலும், ஜெய்ஸ்வால் மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். ஒரு கட்டத்தில் அணியின் வெற்றி வாய்ப்பிற்கான சூழலையும் உருவாக்கிக் கொடுத்தார்.  65 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்த இந்த இன்னிங்ஸின் போது, ​ ஜெய்ஸ்வால் ஒரு சிறப்பான சாதனையைப் படைத்த முதல் இந்தியர் ஆனார். 


ஜெய்ஸ்வால் படைத்த சிறப்பு சாதனை:


இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 92 ஆண்டுகால வரலாற்றில், ஒரே காலண்டர் ஆண்டில் 30 டெஸ்ட் சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். இந்த 2024ம் ஆண்டு ஜெய்ஸ்வாலுக்கு ஒரு கனவு ஆண்டாக மாறியுள்ளது. நடப்பாண்டில் தற்போது வரை அவர் 1,000 டெஸ்ட் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 


நேற்றைய இன்னிங்ஸ்ல் ஜெய்ஸ்வால் அடித்த மூன்று சிக்ஸர்கள்,  இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த சிக்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்தியுள்ளது. இந்த சாதனைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் முதல் இடத்தில் உள்ளார். அவர் 2014ம் காலண்டர் ஆண்டில் 33 டெஸ்ட் சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.


சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு:


நியூசிலாந்துக்கு எதிராக மேலும் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரும் இருப்பதால், மெக்கலத்தின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு  அதிக வாய்ப்பு உள்ளது.


இந்தியா vs நியூசிலாந்து, 2வது டெஸ்ட் நாள் 3:


ஜெய்ஸ்வாலின் அற்புதமான ஆட்டம் இருந்தபோதிலும், அவர் ஆடமிழந்ததும் இந்திய இன்னிங்ஸ் சரிந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தபிறகு இந்தியா 118 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்தினார். அவர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, 13/157 என ஒரு டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.


ஜெய்ஸ்வால் வெளியேறிய பிறகு இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே 20 ரன்களைக் கடந்தனர். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும் எடுத்து கடைசியாக அவுட் ஆனார். அதிர்ச்சித் தொடர் தோல்விக்கு மத்தியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 ​​சுழற்சி அட்டவணையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.