உலககோப்பை டி20 தோல்விக்கு பிறகு இந்திய அணியின் டி20 முகத்தை மாற்ற பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதிய டி20 அணியும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இந்திய அணி, அங்கு நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த தொடருக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த ஹர்திக் பாண்ட்யா டி20 கேப்டன்சியில் புதிய சாதனை படைத்துள்ளார்.




ஹர்திக் பாண்டயா:


இந்திய அணிக்காக டி20 கேப்டனாக பொறுப்பு வகித்தவர்களிலே முதல் 5 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத முதல் கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். நடப்பாண்டில் அயர்லாந்து அணிக்கு எதிராக டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.




அந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது. நடப்பாண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் மட்டும் கேப்டனாக களமிறங்கிய ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 மழையால் ரத்தான நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், கடைசி டி20 போட்டி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி டை ஆனது.


முதல் கேப்டன்:


இதன்மூலம், டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் எந்த தோல்வியையும் சந்திக்காத முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை மகேந்திர சிங் தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கூட படைத்தது இல்லை.


5 வெற்றிகள்:



  • அயர்லாந்துக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  • அயர்லாந்துக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • நியூசிலாந்துக்கு எதிராக 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் 


ஹர்திக் பாண்ட்யா இதுவரை 81 டி20 போட்டிகளில் ஆடி 1160 ரன்கள் விளாசியுள்ளார். அவற்றில் 3 அரைசதங்கள் அடங்கும். மேலும், 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கிய முதல் சீசனிலே குஜராத் அணி ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : Team India Squad: மீண்டும் ரவீந்திர ஜடேஜா இல்லாத அணி... வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு


மேலும் படிக்க: FIFA World Cup : உலககோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்குமா பிரேசில், போர்ச்சுக்கல்..?