உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி தள்ளியுள்ளனர். 


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய 15வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (நவம்பர் 19) முடிவடைந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றது. போட்டிகள் அனைத்தும் சென்னை,பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, தர்மசாலா, அஹமதாபாத், புனே, லக்னோ, டெல்லி ஆகிய 10 இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. 


இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன்மூலம் 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று அந்த அணி சாதனைப் படைத்தது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 






அதேசமயம் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ஆடிய 10 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் எதிர்பாராத தோல்வி இந்திய அணி வீரர்களை மட்டுமல்லாமல், மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபக்கம் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், மறுபக்கம் இப்படி ஒரு தோல்வியை பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 




    • ஒரு ரசிகர், ‘10 போட்டிகளிலும் ஜெயித்ததால் இந்த போட்டியையும் ஜெயித்து விடுவார்கள் என நினைத்தேன். ஆனால் தோற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். 

    • இன்னொருவர், ‘இந்த நேரத்தில் நான் தல தோனியை மிஸ் பண்றேன். அவர் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது’ என கூறினார். 






  • ஒரு சிறுவன், ‘இந்த மேட்ச் தோற்றதுக்கு காரணமே தோனி இல்லாதது தான். அவர் இருந்திருந்தா நொறுக்கிருப்பாரு” என தனது குமுறலை பதிவு செய்தான்

  • இளம் ரசிகர் ஒருவர், ‘மனதுக்கு கஷ்டமா இருக்கு. நல்லாதான் விளையாடினார்கள். அதை பாராட்டுகிறேன். ஆனால் தோல்வி ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். 

  • நான் லீவு போட்டு வந்ததுக்கு இந்திய அணி இப்படி ஏமாத்திட்டாங்களே என மெரினா கடற்கரையில் போட்டியை பார்க்க வந்த ஒருவர் புலம்பியுள்ளார்

  • ரசிகை ஒருவர், ‘ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் கடினமாகத்தான் போட்டி சென்றது. ஆனால் நாங்கள் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. நாங்க பவுலர்கள் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தோம். ஆனால் முடிவு வேற மாதிரி இருந்துச்சு” என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.