உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணிக்கு ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஆறுதல் தெரிவித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


15வது உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சென்றது. நேற்று (நவம்பர் 19) குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. 


இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி சதமடித்ததோடு, வெற்றிக்கும் எளிதாக உதவினார். இதனால் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 6வது உலகக்கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதனைப் படைத்துள்ளது. 


ஒரு பக்கம் அந்த அணிக்கு இந்திய ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இந்த உலகக்கோப்பையில் 9 லீக் போட்டிகள், ஒரு அரையிறுதிப் போட்டி என எதிலும் தோல்வியே இல்லாமல் வெற்றி நடைப்போட்ட இந்திய அணி, இறுதிப்போட்டியில் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது வீரர்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. இந்திய அணி வீரர்கள் அனைவருமே மைதானத்தில் கண் கலங்கினர். 


இப்படியான நிலையில் இக்கட்டான சூழலில் இந்திய அணிக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருவதோடு, தோல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல, வெற்றி நடைபோடுமாறும் சப்போர்ட் செய்துள்ளனர். அந்த வகையில் அரசியல் தலைவர்களும் இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். அதனைப் பற்றி காணலாம். 


பிரதமர் மோடி 


“அன்புள்ள இந்திய அணி. உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம்” என கூறியுள்ளார். 


ராகுல் காந்தி 


"இந்திய அணி வீரர்கள் நீங்கள் போட்டிகளில் சிறப்பான விளையாடினீர்கள். வெற்றி அல்லது தோல்வி எது நடந்தாலும் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாம் அடுத்தமுறை நிச்சயமாக வெற்றி பெறுவோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


"உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்..! அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக ஓடிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் . உங்கள் நெகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது!" என தெரிவித்துள்ளார். 


உள்துறை அமைச்சர் அமித்ஷா


“நமது இந்திய அணி உலகக் கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடி மறக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியது. உண்மையான விளையாட்டுத் திறன் என்பது வெற்றிகள் மற்றும் தோல்விகள் இரண்டிலிருந்தும் வலுவாக வெளிப்படுவதை உள்ளடக்கியது. நீங்கள் இன்னும் வலுவாக வெளிப்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என ஆறுதல் தெரிவித்துள்ளார்


யோகி ஆதித்யநாத்


உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்! முழுப் போட்டியிலும் சிறந்த விளையாட்டுத்திறன் மற்றும் சிறப்பான ஆட்டத்திறன் மூலம் கோடிக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்களின் இதயங்களை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் உன்னால் பெருமை அடைகிறோம்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை


கிரிக்கெட் என்பது நமக்கு ஒரு விளையாட்டு மட்டுமல்ல, நம் நாட்டை ஒன்றாக இணைக்கும் ஒரு உணர்வு. இந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு டீம் இந்தியாவின் ஈர்க்கக்கூடிய வேகம் நம் தேசம் முழுவதும் அபரிமிதமான நேர்மறை மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது மற்றும் எதிர்பார்ப்புகள் இன்று அதிகமாக இருந்தன.நாங்கள் இன்று தயாராகிவிட்டோம்; எதிராளி சிறப்பாக தயாராக இருந்தார்! விளையாட்டுத் திறமையுடன் விளையாடும் எவருக்கும் அடுத்த முறை எப்போதும் உண்டு!ஒரு அற்புதமான வெற்றிக்காக ஆஸ்திரேலியா அணியும், இன்று இரண்டாவது சிறந்த அணியாக இந்திய அணியும் தலைநிமிர்ந்து விளையாடியதற்கும் வாழ்த்துகள்!


"உங்கள் கனவுகளைத் துரத்துவதை நிறுத்தாதீர்கள், ஏனென்றால் கனவுகள் நனவாகும்." - சச்சின் டெண்டுல்கர்.


ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி


2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அபாரமான பயணத்திற்காக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு எனது பாராட்டும் மரியாதையும் தெரிவித்து கொள்கிறேன்.போட்டி எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், அவர்களின் எனர்ஜி, விளையாட்டுத்திறன் மற்றும் இந்த பயணத்தின் மூலம் எண்ணிலடங்கா தருணங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளன! இந்திய அணி, நீங்கள் எங்கள் இதயங்களை வென்றுவிட்டீர்கள்!


கேரள முதல்வர் பினராயி விஜயன்


ஆறாவது உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணி போட்டிகள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இறுதிப் போட்டியை எட்டியது, பெருமைமிக்க சாதனைகளால் எடுத்துக்காட்டுகிறது.எதிர்காலத்தில் மேலும் பல போர்களில் வெற்றி பெற நமது அணி தைரியத்துடன் எழ வேண்டும்.