IND Vs NZ TEST: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியுற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி, 3-0 என கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் குறைந்தது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்திய அணி முற்றிலுமாக இழப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.


121 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்:


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, 235 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 263 ரன்களை மட்டுமே சேர்த்தது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வெறும் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 


ஆனால், இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரிஷ்ப் பண்ட் மட்டும் 64 ரன்களை விளாசினர். கேப்டன் ரோகித் 11 ரன்களிலும், கோலி வெறும் 1 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 121 ரன்களுக்கே ஆட்டமிழந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணி 3-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது. 


முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடரை இழந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. 


வரலாற்றில் மோசமான தோல்வி:


கடந்த 12 ஆண்டுகளாக உள்ளூர் டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றதே இல்லை என்ற சாதனை, இந்த தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தது 3 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி இதுவரை ஒயிட் வாஷ் ஆனதே கிடையாது என்ற சாதனையும் தவிடுபொடியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2000வது ஆண்டில் உள்ளூரில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது.


சொதப்பிய கோலி, ரோகித்தின் பேட்டிங்:


உள்ளூர் மைதானத்தின் சூழலை வழக்கம்போல திறமையாக கையாண்டு, இந்திய பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்பட்டனர். ஆனால், இந்த தொடரின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததே இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங் தான். குறிப்பாக அணியின் பேட்டிங் தூண்களாக கருதப்படும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் கோலி ஆகியோர் இந்த தொடரில் மோசமான ஃபார்மை தொடர்ந்தனர். 6 இன்னிங்ஸில் களமிறங்கி ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அரைசதம் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்  இந்திய அணியின் வாய்ப்பு மேலும் கடினமாகியுள்ளது.