இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.  இரு அணிகளும் மோதும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் தொடரை இந்தியா இழந்தது.


இந்தியா இந்த தொடரை இழந்துவிட்டதால் இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் டேரில் மிட்செல் எடுத்த 82 ரன்கள் உதவியால் நியூசிலாந்து அணி 235 ரன்களை எடுத்தது.


கலக்கிய ரிஷப்பண்ட்:


இதையடுத்து, ஆட்டத்தின் முதல்நாளான நேற்றே இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்தது. 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ரிஷப்பண்ட் – சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்கினர். நீண்டநாட்களாகவே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


ரிஷப்பபண்டும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்தியாவின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 96 ரன்கள் குவித்த நிலையில் ரிஷப் பண்ட் அவுட்டானார். அவர் 59 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


காப்பாற்றிய கில்:


அடுத்து வந்த ஜடேஜா 14 ரன்களில் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் டக் அவுட்டானார். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன்கில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 90 ரன்களில் அவுட்டானார். சுப்மன்கில் ஆட்டமிழக்கும் முன்பே இந்திய அணி நியூசிலாந்தை விட முன்னிலை பெற்றது.


சுப்மன்கில் 146 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடினார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாச இந்திய அணி 59.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


வெற்றி வசப்படுமா?


தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடி வரும் நியூசிலாந்து டாம் லாதம் விக்கெட்டை பறிகொடுத்த ஆடி வருகிறது. இந்த போட்டிக்கு முடிவு நாளை அல்லது நாளை மறுநாளே கிடைத்துவிடும் என்பது மட்டும் உறுதியாகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த போட்டியில்தான் இந்திய அணி நியூசிலாந்தை விட ரன்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்தே முன்னிலை பெற்றிருந்தது.


இந்த போட்டியில் நியூசிலாந்தை குறைந்த ரன்னில் சுருட்டி குறைந்த இலக்கை எட்டினால் இந்திய அணி இந்த போட்டியை வெற்றி பெறும். 2-1 என்று தொடரை இழந்தாலும் வெற்றியுடன் இந்திய மண்ணில் இந்தாண்டு தொடரை முடித்த உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களுக்கு எதிரான டெஸ்ட் தொடரை  தொடங்கலாம்.