இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா இடம்பெறவில்லை. இந்த அணி அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே இவரை அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் பரவி வந்தது. இது தொடர்பாக சாஹா தன்னுடைய விரக்தியை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தாண்டு இந்திய அணிக்கு 3 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே உள்ளது. ரிஷப் பண்ட் ஏற்கெனவே அணியின் முதல் விக்கெட் கீப்பராக தன்னை நிரூபித்துள்ளார். ஆகவே அவருக்கு அடுத்த இடத்திற்கு ஒரு இளம் வீரரை தயார் செய்ய அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதனால் சாஹா இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய செயல்கள் மற்றும் அவர் மேல் எனக்கு இருந்த மரியாதை குறைந்தது என்று கூற முடியாது. 


இயல்பாக இதுபோன்ற விஷயங்களில் நான் தலையிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்று நான் பேசுவது அவர்களுக்கு ஒருநாள் நிச்சயம் புரியும். நானும் ரோகித் சர்மாவும் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக அணியில் இடம்பெறாத வீரர்களிடம் பேசுவோம். ஏனென்றால் அந்த சமயத்தில் வீரர்கள் விரக்தியுடன் இருப்பது இயல்பு. ஆகவே அவர்களிடம் பேசி அதை தெளிவுப்படுத்துவது நல்லது. 




சாஹாவின் கருத்து என்னை காயப்படுத்தவில்லை. எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அந்த மரியாதையின் காரணமாக தான் நான் அவரிடம் பேசினேன். அவருக்கு இந்த விஷயம் தெளிவாக தெரிய வேண்டும். இந்த விஷயம் அவருக்கு பத்திரிகை மூலமாக தெரியவதற்கு முன்பாகவே தெளிவாக தெரிய வேண்டும் என்று நான் நினைத்தேன். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் வீரர்களிடம் பேசிவது வழக்கம். ஆகவே அவருடைய கருத்து என்னை காயப்படுத்தவில்லை. என்னுடைய அனைத்து கருத்துகளையும் வீரர்கள் ஏற்க வேண்டும் என்று நான் ஒரு போதும் கருதியதில்லை. அதற்காக வீரர்களிடம் பேச வேண்டாம் என்று நினைப்பவன் நான் அல்ல” எனத் தெரிவித்துள்ளார். 


தற்போது 37 வயதாகும் விருத்திமான் சாஹா இந்திய அணியில் இனிமேல் இடம்பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, “நாங்கள் ஒரு போதும் வயதை நினைத்து பார்ப்பதில்லை. ஆனால் வெளியே சில இளம் வீரர்கள் வாய்ப்பிற்காக இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பாக நாங்கள் பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 




மேலும் படிக்க: கடைசி டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி...! வெஸ்ட் இண்டீஸ் போராடி தோல்வி...!