Gautam Gambhir: இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, கவுதம் கம்பீர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.


கம்பீர் செய்தியாளர் சந்திப்பு:


செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர், “டி20 உலகக் கோப்பை வென்றதோடு, ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்ற ஒரு வலுவான அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளேன். நான் செய்ய வேண்டிய வேலைகள் மிகப்பெரியது. பயிற்சியாளர் தரத்திற்கு நான் வளர்ந்துள்ளேன் என்பதை விட, அணியை வளர்ப்பதே அவசியம்.


கோலி & ரோகித் எதிர்காலம் என்ன?


விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் உலகக்த்தரம் வாய்ந்த வீரர்கள், விளையாட வேண்டிய கிரிக்கெட் இன்னும் நிறைய உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலியா தொடர் வருகிறது. தொடர்ந்து, உடற்தகுதி சரியாக இருந்தால், 2027 உலகக் கோப்பையிலும் விளையாடலாம். டி20 போட்டிகளில் இருந்து விலகியதை அடுத்து, மற்ற பெரும்பாலான போட்டிகளில் கோலி மற்றும் ரோகித் இடம்பெறுவார்கள். கோலி உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். ஏற்கனகே சொன்னதை போன்று இந்தியாவும், 140 கோடி மக்களும் பெருமைப்படும் விதமாக நாங்கள் செயல்படுவோம்.






ஹர்திக் கேப்டன் ஆகாதது ஏன்?


ஹர்திக் ஒரு மிக முக்கியமான வீரர், அவரது திறமை மிகவும் அரிதானது. ஆனால் அவரது உடற்தகுதி என்பது ஒரு சவாலானதாக உள்ளது. மேலும் எப்போதும் அணியுடன் இருக்கும் ஒருவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.


கில்லின் எதிர்காலம் என்ன?


தேர்வுக்குழு தலைவர் அகர்கர் பேசுகையில், ”சுப்மன் கில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். ஒரு நல்ல கேப்டன் திறனையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சூர்யகுமார் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடமிருந்து, அவர் நிறைய கற்றுக்கொள்வார். ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் இருப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர். இருவருமே உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ரிஷப் பண்ட்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். தற்போதைய சூழலில் சூர்யகுமார் யாதவ் டி20 அணிக்கு மட்டுமே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் எங்களுக்கு முக்கியமான வீரர். காயத்திலிருந்து மீண்டு வரும் ஷமி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவார்.” என தெரிவித்தார்.