இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்றது. அதில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 152 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 60 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 17.5 ஓவர்களில் 153 ரன்கள் அடித்து இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு முன்பாக இந்திய அணி இரண்டு வெற்றிகளுடன் நல்ல பயிற்சியுடன் செல்கிறது.
இன்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சின் போது இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீசினார். அவர் ஆட்டத்தின் 7ஆவது ஓவரை வீசினார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். விராட் கோலி பந்துவீசிய சம்பவம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. இது தொடர்பாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த விஷயத்தில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் உள்ளது.
அதாவது அக்டோபர் மாதம் 20ஆம் தேதி 2010ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் விராட் கோலி 118 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். அந்தப் போட்டியில் இதே நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலிக்கு பந்துவீசினார். தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதே நாளில் விராட் கோலி பந்துவீசும் போது ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகவும் ஒரு சிலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் விராட் கோலி பந்துவீசிய சம்பவமும் ட்விட்டர் தளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா தற்போது பந்துவீசுவதில்லை. எனவே ஒருவேளை தேவைப்பட்டால் ஆறாவது பந்துவீச்சாளராக ஒரிரு ஓவர்கள் வீச வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க:ரிஷப் பண்ட்டுக்கு இப்படி ஒரு பயிற்சி கொடுக்கும் தோனி.. வைரலாகும் ஃபோட்டோஸ்..