சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் ஜனவரி 24, 2013 அன்று, ரோகித் சர்மா முதல் முறையாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக ஷிகர் தவானுடன் களமிறங்கினார். இதுதான் ரோகித் சர்மாவின் 2.0 என்றே கூறலாம். இதற்கு பிறகே, ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலிக்க தொடங்கினார். 


தற்போது, இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பார்மில் இல்லை என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றும் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒருநாள் வரலாற்றில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித சர்மா மட்டுமே தனது கைகளில் வைத்துள்ளார். ஒருநாள் தொடக்க வீரராக தனது 10 வது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கும் ரோகித் சர்மா, இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தனது மூன்று ஆண்டுகால சத வறட்சியை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபியில் இந்திய அணி சில பயிற்சி போட்டிகளில் விளையாடியது. அப்போது, இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்த முரளி விஜய் சொதப்பினார். இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக அப்போதைய கேப்டன் எம்.எஸ். தோனி கொண்டு வந்தார். 


அந்த நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு, தற்போது இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இதுவரை 240 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 48.65 சராசரியுடன் 9681 ரன்கள் எடுத்துள்ளார். 


அதே நேரத்தில், தொடக்க வீரராக ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 55. 93 சராசரியுடன் 7663 ரன்கள் எடுத்துள்ளார். 







ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் சாதனை:



  • ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர்.

  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 264 ரன்கள் அடித்துள்ளார்.

  • சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு தொடக்க வீரராக 27 சதங்கள் அடித்துள்ளார்.

  • ஒரே உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்துள்ளார்.

  • ரோகித் சர்மா சதம் அடிக்கும்போது, இந்திய அணி 70% வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது. 






இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 10 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ ரோகித் சர்மா ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். அவரை 17 வயதில் முதன்முறையாக பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது. ரோகித் சர்மா கடந்த 15 ஆண்டுகளாக என்ன செய்தார் என்பது நமக்கு நன்கு தெரியும்.  அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த சேவகர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரோகித்  ஓப்பன் செய்யும் வாய்ப்பைப் பெற்ற பிறகுதான், இந்திய அணிக்கும் அவருக்கும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. 






அதனால்தான் பெரிய ரன்களை குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ஒருநாள் பார்மேட்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர். இது முற்றிலும் ஒரு அற்புதமான சாதனையாகும்.