2022 ஆசிய கோப்பைக்கு பிறகு இந்த முறை 2023 ஆசிய கோப்பை 14-வது பதிப்பானது ஒருநாள் வடிவத்தில் விளையாடப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023-க்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதே நேரத்தில், இந்த ஆசிய கோப்பையின் மூலம், இந்திய அணி 2023-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், ஆசிய கோப்பையின் மூலம், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நான்கு பெரிய சாதனைகளை படைக்க இருக்கிறார்.  


ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள்: 


இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 244 ஒருநாள் போட்டிகளில் 237 இன்னிங்ஸ்களில் 9837 ரன்கள் எடுத்துள்ளார். ஆசிய கோப்பையில் 10,000 ரன்களை முடிக்க அவருக்கு 173 ரன்கள் தேவையாக உள்ளது. வருகின்ற ஆசிய கோப்பையில் 173 ரன்கள் எடுத்தால் ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை எட்டிய 15வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார். அதே நேரத்தில் இந்திய அணிக்காக இந்த சாதனையை படைத்த ஆறாவது வீரர் என்ற பெருமையையும் அடைவார். ஆசியக் கோப்பையில் 10,000 ரன்களை ரோஹித் சர்மா கடந்தால், விராட் கோலிக்கு (213 போட்டிகள்) பிறகு ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களைக் கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் இவரிடம் தஞ்சமடையும். 


ஆசிய கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர்: 


வருகின்ற ஆசியக் கோப்பையில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைக்க இருக்கிறார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மாக்கு ஆசிய கோப்பையில் 1000 ரன்களை தொட 255 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அதே சமயம், ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த சாதனை சச்சின் டெண்டுல்கரின் பெயரில் உள்ளது. அவர் ஆசிய கோப்பையில் 971 ரன்களை குவித்துள்ளார். 


ஆசியக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்: 


ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 23 போட்டிகளில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். 2008ல் முதல் ஆசிய கோப்பையை விளையாடிய ரோஹித் சர்மா, இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ரோஹித் இன்னும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும். 


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 534 சிக்சர்களை அடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலைக் கடக்க ரோஹித் சர்மாவுக்கு 20 சிக்ஸர்கள் மட்டுமே தேவையாக உள்ளது.