மகளிர் டி20 உலகக் கோப்பை: குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும், குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணியும் இன்று அரையிறுதியில் சந்திக்கின்றன.
பிப்ரவரி 23 ம் தேதி (இன்று) கேப்டவுனில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 முதல் அரையிறுதியில் மெக் லானிங் தலைமையிலான நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும் மோதுகின்றன.
மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் சுற்று குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், இந்தியா நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளுடன் பி பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
எனவே, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும், குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணியும் இன்று அரையிறுதியில் சந்திக்கின்றன. அதேபோல், இரண்டாவது அரையிறுதியானது வருகிற பிப்ரவரி 24 (நாளை) நடைபெறுகிறது. இதில், தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி நேரம்: தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நியூலேண்டில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
ஸ்ட்ரீமிங் :
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதி போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும் மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் லைவ்வாக பார்க்கலாம்.
இதுவரை நேருக்குநேர்:
இந்தியா மகளிர் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் இடையே இதுவரை 30 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், ஆஸ்திரேலிய அணி 22 முறை வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு அணிகளும் நேரடி டி20 போட்டிகளில் மோதியது. அதில், இந்திய அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையே நடந்த கடைசி ஐந்து டி20 போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி 4 முறையும், இந்திய அணி ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
ஹெட் டூ ஹெட்:
விளையாடிய போட்டிகள்: 30
இந்திய அணி வென்றது: 7
ஆஸ்திரேலியா அணி வென்றது: 22
முடிவு இல்லை: 1
கடைசி முடிவு: ஆஸ்திரேலியா பெண்கள் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர் (டிசம்பர் 2022)
கடைசி ஐந்து முடிவுகள்: ஆஸ்திரேலியா பெண்கள் வென்றது: 4; இந்திய பெண்கள் வெற்றி: 1
கணிக்கப்பட்ட பிளேயிங் 11:
இந்தியா:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
ஆஸ்திரேலியா:
பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்
யாருக்கு வெற்றி..?
இந்திய மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் அரையிறுதியில் வெற்றிபெற தீவிரமாக போராடும். இருப்பினும், புள்ளி விவரங்கள் மற்றும் இரு அணிகளையும் ஒப்பிடும்போது, ஆஸ்திரேலிய மகளிர் அணியே அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டாலும், இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கி ஆஸ்திரேலியாவுக்கே அதிர்ச்சியளிக்கும்.