இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20 தொடர் சம நிலையில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி செஞ்சுரியனில் தொடங்க உள்ளது.


ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம்:


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்திருந்தார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் 3வது ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. டெஸ்ட் தொடருக்கு ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் முழு உடல்தகுதி எட்டாத காரணத்தால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.


அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அவரது காயம் காரணமாக அவரை எஞ்சிய தொடரில் இருந்து விலக்கி வைக்குமாறு பி.சி.சி.ஐ. மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






அதேபோல, தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய ஏ அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஏ அணியில் ரஜத் படிதார், சர்ப்ராஸ் கான், ஆவேஷ் கான் மற்றும் ரிங்குசிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மீண்டும் வரும் ரோகித்சர்மா, விராட் கோலி:


ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன்கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ்குமார், பும்ரா ( துணை  கேப்டன்) பிரசித் கிருஷ்ணா, கே.எஸ்.பரத் ( விக்கெட்கீப்பர்).


உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பிறகு ரோகித்சர்மா, விராட் கோலி இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் தொடரை எதிர்கொண்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, ரோகித்சர்மா  மற்றும் விராட்கோலி இந்திய அணிக்கு திரும்புவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.