இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வரலாற்று வெற்றி பெற்றி சாதனை படைத்துள்ளது. 


இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டித்தொடர் நடைபெற்றது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 


தொடர்ந்து 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி வீரர்கள் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல், சோஃபி எக்கிள்ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 35.3 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 5 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஹவுர் 44 ரன்கள் எடுத்தார். 






இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையை சேர்ந்து இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 479 ரன்களை நிர்ணயித்தது.  ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 4 விக்கெட்டுகளும், பூஜா வஸ்த்ரகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.  இரு இன்னிங்ஸையும் சேர்த்து தீப்தி ஷர்மா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்திய  மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.