ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளது. 


ஐபிஎல் தொடர்


இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறது. 


மாறிய மும்பை அணி கேப்டன் 


இதனிடையே 17வது ஐபிஎல் தொடர் 2024 ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்காக வரும் டிசம்பர் 19 ஆம் தேதி  வீரர்களின் மினி ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வீரர்கள் பதிவு செய்திருந்தாலும் 333 வீரர்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. முன்னதாக கடந்த வாரம் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள், வெளியேற்றப்பட்ட வீரர்கள் அடங்கிய பட்டியலையும் ஒவ்வொரு அணியும் வெளியிட்டு விட்டன.


இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா கழட்டி விடப்பட்டுள்ளார். 36 வயதாகும் அவர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். ஆனால் சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்தும் இந்திய அணி கோப்பையை தவற விட்டது. அதனோடு ரோகித் சர்மா தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இதற்கிடையில் தான் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வரை மும்பை அணியில் விளையாடி ஹர்திக் பாண்ட்யா, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். இதில் 2022 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய அணி, நடப்பாண்டு தொடரில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்றது. 






கள நிலவரம் இப்படி இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை வீரர்கள் பரிமாற்றம் செய்யும் முறையில் மும்பை அணிக்கு திரும்ப அழைத்துக் கொண்டது. அதேசமயம் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. ரோகித் சர்மா 5 முறை மும்பை அணிக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவருக்கு இப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏற்க முடியாது என சமூக வலைத்தளங்களில் சொல்லி வருகின்றனர். 


சென்னை அணி சாதனை


மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்டதால் அந்த அணியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரை குறைந்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் அணிகளில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட அணியாக சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியை கிட்டதட்ட 1.40 கோடி பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.