ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹேலி 25 ரன்களில் அவுட்டானாலும், அடுத்து ஜோடி சேர்ந்த மூனி மற்றும் தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடினர். இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சை விளாசினர். மூனி மற்றும் தஹிலா இருவரும் அரைசதம் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 187 ரன்களை விளாசியது. கேப்டன் மூனி 54 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 82 ரன்களும், தஹிலா மெக்ராத் 51 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 70 ரன்களும் விளாசினர்.




இதையடுத்து, 188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிரிதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேவில் இருவரும் விளாசினர். அணியின் ஸ்கோர் 76 ரன்களை எட்டியபோது 23 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்திருந்த ஷபாலி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமா 4 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத கவுர் 21 ரன்களில் அவுட்டானார்.






இந்திய அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய மந்தனா அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 148 ரன்களை எட்டியபோது அபாரமாக ஆடி வந்த ஸ்மிரிதி ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 79 ரன்களில் ஆட்டமிழந்தார்.


கடைசி கட்டத்தில் தீப்தி ஷர்மா 2 ரன்களில் அவுட்டானாலும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் மற்றும் தேவிகா அதிரடி காட்டினர். திரில்லாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 187 ரன்களை 20 ஓவர்கள் முடிவில் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.




இதையடுத்து, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக ரிச்சா கோஷ் சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கினார். அந்த ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் விளாசியது. மந்தனா 2 பந்தில் 10 ரன்களை விளாசினார். அடுத்து 18 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 16 ரன்கள் மட்டுமே சூப்பர் ஓவரில் விளாசியது. இதனால், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.