இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், ஐசிசியின் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதையும், பாகிஸ்தானின் சிட்ரா அமீன் சிறந்த வீராங்கனை விருதையும் வென்றுள்ளனர்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நவம்பர் 2022க்கான மாதத்தின் சிறந்த வீரர் விருதுகளின் வெற்றியாளர்களை இன்று அறிவித்தது. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறந்த பேட்டிங் செய்ததால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஐசிசியின் ஆண்களுக்கான சிறந்த வீரருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.


அதே நேரத்தில் பாகிஸ்தான் தொடக்க வீராங்கனை சித்ரா அமீன் ஐசிசி மகளிர் பிரிவில் நவம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். சொந்த மண்ணில் அயர்லாந்துக்கு எதிரான சமீபத்திய வெற்றிகரமான ஒருநாள் தொடரில் மகத்தான ஸ்கோரை பதிவு செய்ததற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 176 ரன்களை விளாசினார்.
icc-cricket.com இல் பதிவுசெய்யப்பட்ட ஊடக பிரதிநிதிகள், ICC ஹால் ஆஃப் ஃபேமர்ஸ், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட உலகளாவிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து பட்லர் மற்றும் அமீன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.






நவம்பர் மாதம் 1ம் தேதி பிரிஸ்பேனில் நியூசிலாந்துக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. அந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஜோஸ் பட்லர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதுக்கும் உறுதுணையாக இருந்தார் பட்லர். அந்த ஆட்டத்தில் அவர் 80 ரன்களை விளாசினார்.


 “நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக எனக்கு வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வெல்வதில் பக்கபலமாக இருந்த எனது அணி வீரர்களின் முயற்சிக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
அணியின் வீரர்கள் கேப்டன் என்ற முறையில் வழிநடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் பட்லர்.


சூர்யகுமார் யாதவை மட்டும் மிஸ்டர் 360 என்று அழைக்காதீங்க - இஷான் கிஷனுக்கு ஆதரவாக முன்னாள் வீரர்






“இந்த விருதை வென்றதற்காக நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அக்டோபருக்கான விருதை வென்ற எனது அணி வீராங்கனை நிடா டாரைப் பின்தொடர்வதும் சிறப்பு. சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாக எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை இது காட்டுகிறது. இந்த விருதை எனது பெற்றோருக்கும், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து எனது வெற்றிக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் அயர்லாந்தை ஒயிட் வாஷ் செய்ததற்கு நானும் உதவியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அமீன்.