வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் கனா திரைப்படத்தில் நடித்த சஜீவன் சஜனா இடம்பிடித்துள்ளார். 


வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி தொடங்கும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான 16 வீராங்கனைகள் கொண்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட சஜீவன் சஜனா மற்றும் ஆஷா சோபனா ஆகியோர் இந்திய அணிக்காக தங்களது முதல் அழைப்பை பெற்றுள்ளனர். 


லெக் ஸ்பின்னரான ஆஷா சோபனா, கடந்த மகளிர் பிரீமியர் லீக்கில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஆர்சிபி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய அவர், 15.42 சராசரியில் 12 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், நடத்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதேபோல், மற்றொரு ஆர்சிபி வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலும், குஜராத் அணியின் இடம்பெற்றிருந்த தயாளன் ஹேமலதாவும் இடம் பிடித்துள்ளனர். தயாளன் ஹேமலதா இந்திய அணிக்காக கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சஜீவன் சஜனா, மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணிக்கு எதிராக 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில், களமிறங்கி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த வீடியோ பயங்கர வைரலானது குறிப்பிடத்தக்கது. இதுபோக, புனேவில் சமீபத்தில் முடிவடைந்த இண்டர்-மண்டல ரெட்-பால் போட்டியில் அரையிறுதியில் 74 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இவரை இந்திய அணி முதல் முறையாக விளையாட அழைப்புவிடுத்துள்ளது.






சஜீவன் சஜனா, அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


யார் இந்த சஜீவன் சஜனா..? 


கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மானந்தவாடியைச் சேர்ந்த சஜீவன் சஜனா ஆல்ரவுண்டர் ஆவார். 2023 மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. அதன்பிறகு, 2024 ஏலத்தில் ரூ. 10 லட்சத்திற்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். 


சஜனாவின் தந்தை சஜீவன் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது தாயார் சாரதா சஜீவன் கவுன்சிலராக உள்ளார். கேரளாவின் வயநாட்டில் உள்ள பழங்குடி சமூகமான குறிச்சியா பழங்குடியினத்தைச் சேர்ந்த சஜனா, மின்னு மணிக்குப் பிறகு மகளிர் பிரீமியர் லீக்கில் விளையாடிய இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 


 சஜ்னா இரண்டு முறை கேரளாவின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2023 சீனியர் மகளிர் டி20 டிராபி 2023ல், அவர் ஏழு இன்னிங்ஸ்களில் 134 ரன்கள் குவித்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


வங்கதேசத்துக்கு எதிரான 5 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:


ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, சஜனா சஜீவன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அமஞ்சோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக் , ஆஷா சோபனா, ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது.