IND vs WI: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 448 ரன்கள் குவித்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றனர். முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடியது. இரண்டாம் நாள் முடிவின் படி இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்று வீரர்கள் சதம்:
இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 36 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் மற்றொரு வீரரான கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அந்தவகையில், 197 பந்துகள் களத்தில் நின்ற ராகுல் 12 பவுண்டரிகள் விளாசி 100 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த சாய் சுதர்சன் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் சுப்மன் கில் அரைசதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் - ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், அவ்வப்போது சிக்ஸரும் விளாசினர்.
இதனால், இந்திய அணியின் ஸ்கோர் அதிரடியாக ஏறியது. சிறப்பாக ஆடிய துருவ் ஜுரல் 210 பந்துகள் களத்தில் நின்று 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி மொத்தம் 125 ரன்களை குவித்தார். அதேபோல், களத்தில் நிற்கும் ஜடேஜாவும் சதம் விளாசியிருக்கிறார். 176 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 104 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வாறாக இந்திய அணி வீரர்கள் மூன்று பேர் சதம் விளாசி உள்ளனர்.