மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.


அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றது. பின்பு, மூன்றவாது போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. 


4வது டி-20 போட்டி:


இந்நிலையில் தான் நான்காவது டி-20 போட்டி, இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வென்று தொடரை வெல்ல மேற்கிந்திய தீவுகள் அணியும், போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை வலுப்படுத்த இந்திய அணியும் முனைப்பு காட்டியதால் போட்டியின் மீது பரபரப்பு தொற்றிக்கொண்டது.


மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்:


இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய ஹெட்மேயர் 39 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக சாய் ஹோப் 45 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


கில் - ஜெய்ஷ்வால் பேட்டிங்:


179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கில் - ஜெய்ஷ்வால் கூட்டணி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆரம்பம் முதலே இருவரும் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வெற்றி வாய்ப்பை எளிதாக்கினர். ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் 10 ரன்களை சேர்த்து வந்தனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி தவித்தது. இதனால், கில் மற்றும் ஜெய்ஷ்வால் என இருவருமே அரைசதம் கடந்தனர். 


சாதனை பார்ட்னர் ஷிப்:


தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் - ஜெய்ஷ்வால் கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 165 ரன்களை சேர்த்தது. இதனால், சர்வதேச டி-20 போட்டிகளில் முதல் விக்கெட்டிற்கு இந்திய அணி சார்பில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் கூட்டணியும் முதல் விக்கெட்டிற்கு 165 ரன்கள் சேர்த்து இருந்தது. இந்த சாதனையை ஜெய்ஷ்வால் கில் கூட்டணி சமன் செய்துள்ளது. 


இந்திய அணி எளிதில் வெற்றி:


கில் 77 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிக்ல் நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஷ்வால் 84 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டி-20 போட்டிகளில் அவர் விளாசும் முதல் அரைசதம் இதுவாகும். இதன் மூலம், வெறும் 17 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-2 என சமன் செய்தது.


தொடரை வெல்வது யார்?


இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.  தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் களமிறங்க உள்ளதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.