மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில், தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது.
5ம் நாள் ஆட்டம்:
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை சேர்த்து இருந்தது. அதைதொடர்ந்து, 5ம் நாள் நாள் ஆட்டத்தில் போட்டியில் வெற்றி பெற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்கள் தேவைப்பட்டது. அதேநேரம், இந்திய அணி வெற்றி பெற 8 விக்கெட்டுகள் எடுக்க வேண்டி இருந்தது.
விடாது கொட்டிய மழை;
ஆனால், 5ம் நாள் தொடக்கத்தில் இருந்து போட்டி நடைபெறும் பகுதியில் கனமழை கொட்டியது. விடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல் 5ம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. அதேநேரம், இந்திய அணி தொடரை 1-0 என கைப்பற்றி அசத்தியது. இப்போட்டி இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, 2002ம் ஆண்டிற்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டியில், தோல்வியே கண்டதில்லை என்ற சாதனையை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதோடு, அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து 9வது டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
போட்டியின் சுருக்கம்:
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1-0 என முன்னிலை வகித்து இருந்தது. இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, கோலியின் அபார சதம் மற்றும் ரோகித் சர்மா, ஜெய்ஷ்வால், ஜடேஜா, அஷ்வின் ஆகியோரின் அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியோ 255 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷனின் அதிரடியான அரைசதத்தால் 181 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை சேர்த்து இருந்தது. ஆனால், மழையால் 5ம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி சமனில் முடிந்தது.