டிரினிடாட்டில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதும் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரண் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமாக இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 13 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில்லுடன் இணைந்து வலுவான அடித்தளம் அமைத்தார்.
தொடர்ந்து கடந்த போட்டியை போல சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் 43 ரன்களில் மயேர்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். பின்னால் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 9 ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். நிதான ஆட்டம் ஆடி ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் மீண்டும் ஒரு அரை சதத்தை பதிவு செய்து அவுட் ஆக, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 54 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய தீபக் ஹுடா 33 ரன்களுடன், சர்துல் தாக்கூர் 3, ஆவேஷ் கான் 10 ரன்களுடன் நடையைக்கட்டினாலும், மறுபுறம் அக்சார் பட்டேல் 35 பந்துகளில் ( 3 பெளண்டரி, 5 சிக்ஸர்கள்) 64 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
49. 4 பந்துகளில் இந்திய அணி 312 ரன்கள் குவித்து இந்த தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரையும் கைப்பற்றியது. அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த அக்சார் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்