சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சாலை விபத்துகள் தொடர்பான கேள்வி:


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றிற்கு மத்திய அரசு சார்பில் புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக வெளியான அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான்,  சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமார்  கேள்வி எழுப்பினார்.


4.12 லட்சம் விபத்துகள்:


சாலை விபத்துகள் தொடர்பான கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில், ”கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடைபெற்றன. இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் இறந்தனர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் காயமடைந்துள்ளனர். அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, குடிபோதை மற்றும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 56 ஆயிரத்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 


கோளாறால் நிகழ்ந்த விபத்துகள்:


அதிவேகமாக வாகனங்களை இயக்கியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 40 ஆயிரத்து 450 பேரும், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் ஆயிரத்து 40 பேரும் உயிரிழந்தனர். சாலை சிக்னல்களில் ஏற்பட்ட சில கோளாறுகளால் 555 விபத்துகள் ஏற்பட்டு 222 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் உள்ள குழிகள் காரணமாக  3 ஆயிரத்து 625 விபத்துகள் ஏற்பட்டு, அதில் ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு எச்சரிக்கை:


வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை வழி நேவிகேஷன் நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தலாம்.  அதுவும்  வாகனத்தை இயக்கும் ஓட்டுனரின் கவனத்தை தொந்தரவு செய்யாமல் அமைய வேண்டும். வேறு எந்த பயன்பாட்டிற்காகவும் செல்போன்களை பயன்படுத்த கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.


மத்திய அரசு தீவிரம்:


சாலை விபத்துக்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன என்றும், அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் பிரச்சனைகளைத் தணிக்க பல முனை நடவடிக்கைகள் தேவை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செயல்பட வேண்டி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அபராத விவரம்:


வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசியபடி போது பிடிபட்டால், ரூ. 5000 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அந்த அபராதத் தொகை ரூ.1000 ஆக இருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் அது ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டது.