இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.


இந்தியா தோல்வி:


இந்த போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியபோது, கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் குல்தீப் யாதவ் – அர்ஷ்தீப்சிங் இருந்தனர். அந்த ஓவரின் முதல் பந்திலே குல்தீப் யாதவ் ஆட்டமிழந்தார். இதனால், அப்போது 5 பந்தில் 10 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது.




வெளியில் சாஹல் மற்றும் நேற்றைய போட்டியில் அறிமுகமான முகேஷ்குமார் இருவர் மட்டுமே இருந்தனர். இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், பயிற்சியாளர் டிராவிட்டும் வேகப்பந்துவீச்சாளர் முகேஷை களமிறக்க திட்டமிட்டிருந்தனர். ஏனென்றால் அவரால் பவுண்டரிகள் அல்லது சிக்ஸர் அடிக்க இயலும் என்று அணி நிர்வாகம் கருதியுள்ளது.


தடுத்து நிறுத்திய அம்பயர்:


இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக சாஹல் பேட்டை எடுத்துக்கொண்டு 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிவிட்டார். மைதானத்திற்குள் சென்ற சாஹலை கண்டு அணி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து, சாஹலை மீண்டும் பெவிலியனுக்கு வருமாறு சைகை காட்டினர்.


இதையடுத்து, சாஹல் பெவிலியனுக்கு திரும்ப முற்பட்டபோது அதை அம்பயர் தடுத்துநிறுத்தினர். கிரிக்கெட் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் செய்வதற்காக எல்லைக்கோட்டை தாண்டி மைதானத்திற்குள் வந்துவிட்டால் அவர் கண்டிப்பாக பந்தை எதிர்கொள்ள வேண்டும். எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் அவர் அப்படியே மீண்டும் திரும்ப இயலாது. இது விதியாகும்.




இந்த விதியின்படி, சாஹல் கட்டாயம் பேட் செய்ய வேண்டும் என்று நடுவர் அறிவுறுத்த சாஹல் பேட் செய்தார். சாஹலின் செயல் அணி நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. சாஹல் 1 பந்தில் 1 ரன் எடுத்தார். ஆனால், அதே ஓவரில் அர்ஷ்தீப்சிங் ரன் அவுட்டாக கடைசி விக்கெட்டாக களமிறங்கிய முகேஷ்குமார் 1 ரன் எடுத்தார்.


இந்த போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அறிவுறுத்தல் இல்லாமல் மட்டையுடன் அனுபவம் வாய்ந்த வீரரான சாஹல் பேட்டிங் ஆடச் சென்றது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: அபார சதம் விளாசிய ரோகன்.. எதிரணியை பயமுறுத்திய ரியான்பராக்.. தியோதர் டிராபியை வென்ற தென்மண்டலம்..!


மேலும் படிக்க: IND vs WI: இந்திய அணியின் 200வது டி20 போட்டி… தேசிய கீதத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய ஹர்திக்!