இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. 


163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இந்தநிலையில், நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உள்ளே வந்த சஞ்சு சாம்சன் 5 ரன்களில் அதிர்ச்சியளித்தார். கடந்த 2022 ம் டி20 உலகக் கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் எடுக்காதது இந்திய ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை கிளப்பியது. அதனைதொடர்ந்து, சமீபத்தில் நடந்துமுடிந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்றைய போட்டியின்போது சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டதால், அவர் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இருப்பினும், தனது வாய்ப்பை தவறவிட்டார். 


இதையடுத்து, சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து முன்னாள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”சஞ்சு சாம்சனின் பேட்டின் முனையில் பந்து பட்டு ஹார்ட் தேர்ட் மேன் திசையில் இருந்த தனஞ்சய டி சில்வாவிடம் கேட்சு கொடுத்து அவுட்டானார். சஞ்சு ஒரு அருமையான பேட்ஸ்மேன். கிரிக்கெட்டில் நிறைய திறமைகள் கொண்டவர். ஆனால் நேற்று அவருடைய ஷாட் தேர்வுதான் சிலசமயங்களில் ஏமாற்றி விடுகிறது. அதுபோன்ற ஒரு ஆட்டம்தான் இது” என்றார். 


தொடர்ந்து சஞ்சு சாம்சன் ஆட்டம் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லைவ் ஷோவில் கவுதம் காம்பீர் பேசினார். அதில், ”சஞ்சு சாம்சனுக்கு அவ்வளவு திறமைகள் இருக்கிறது என்பதை பற்றி நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளை அவர்தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். 


இலங்கை தோல்வி: 


163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அறிமுக போட்டியில் மாவி அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து உம்ரான் மாலிக், அசலங்காவையும், ஹர்சல் பட்டேல் ராஜபக்சேவையும், குசல் மெண்டீசையும் வெளியேற்றினர். 


இதையடுத்து, 11 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 68 ரன்களில் இலங்கை அணி தடுமாறியது. அதன்பிறகு, தசுன் சனகா மற்றும் ஹசரங்கா இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். 


11 பந்துகளில் 21 ரன்கள் குவித்த ஹசரங்கா, சிவம் மாவி பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்சானார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அதிரடி காட்டிய தசுன் சனகா 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து 45 ரன்னில் வெளியேற, பின்னால் வந்த மகேஷ் தீக்ஷனாவும் 1 ரன்னில் அவுட்டானார். 


இதையடுத்து இலங்கை அணிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவர் வீசிய அக்சார் படேல் முதல் பந்தே வொய்ட்டாக வீசி அதிர்ச்சியளிக்க, அடுத்த பந்து 1 ரன்னாக அமைந்தது. 2 பந்து டாட்டாக விழுக, ஸ்ரைக்கில் இருந்த கருணாரத்னே அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார். 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 4 வது பந்து டாட்டாக விழுந்தது. 5 வது பந்தில் கருணாரத்னே இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்து, ரஷிதாவை ரன் அவுட்டாகினார். 


கடைசி 1 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களை இழந்து இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. 


இந்திய அணியில் அதிகபட்சமாக மாவி 4 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். 


இந்திய அணிக்காக 23 பந்துகளில் (1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) 41 ரன்கள் அடித்திருந்த தீபக் ஹூடா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.