ஐசிசி உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கும் மற்ற முக்கிய வீரர்களான கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பின் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்தியா அங்கு டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டியிலும் பங்கேற்கிறது.
இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனத்தை செலுத்த விராட் கோலி முடிவு செய்திருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக, இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்று புரியாமல் பிசிசிஐ திணறியது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ள சூழலில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேபோல் ஒரு நாள் போட்டிகளை கே.எல். ராகுல் கேப்டனாக இருந்து வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ கூட்டம் இன்று (நவம்பர் 30 ) முடிந்துள்ளது. அதேநேரம் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், டெஸ்ட் அணியில், ரஹானே, புஜாரா ஆகிய வீரர்களுக்கும் பிசிசிஐ வாய்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இதனிடையே நாளை (டிசம்பர் 1) நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs AUS 4th T20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா... சமன் செய்யுமா ஆஸ்திரேலியா! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
மேலும் படிக்க: Champions trophy: துபாய்க்கு மாற்றப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி? என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?