IND Vs SA ODI Rohit Virat: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி படைக்க வாய்ப்புள்ள சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement


இந்தியா Vs தென்னாப்ரிக்கா தொடர்:


டெஸ்ட் தொடரை அடுத்து இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. ராஞ்சியில் உள்ள மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்கு பதிலடி தரும் விதமாக, ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டுகிறது. குறிப்பாக, நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், பல சாதனைகளை படைக்கும் வாய்ப்புகளை இருவரும் பெற்றுள்ளனர்.



ரோகித் சர்மா படைக்க வாய்ப்புள்ள சாதனைகள்:


ஆஸ்திரேலியா தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசி தொடர்நாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா, இந்த தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்மூலம் பல அரிய சாதனைகளையும் ரோகித் சர்மா நிகழ்த்தக்கூடும். அதன்படி,



  • இன்னும் 98 ரன்களை சேர்த்தால் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்ந்து 20 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக இந்த சாதனையை சச்சின், விராட் கோலி மற்றும் ட்ராவிட் ஆகிய 3 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்

  • ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை (351) விளாசிய வீரர் என்ற சாயித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்க, ரோகித் சர்மாவிற்கு இன்னும் 3 சிக்சர்கள் மட்டுமே தேவைப்படுகிறது

  • இன்னும் 133 ரன்களை சேர்த்தால் உள்ளூர் மைதானங்களில் ஒருநாள் போட்டிகளில் ஐந்தாயிரம் ரன்களை சேர்த்த சச்சின், கோலி அடங்கிய பட்டியலில் மூன்றாவதாக ரோகித் சர்மா இணைவார்

  • இன்னும் ஒரே ஒரு சதம் அடித்தால் உள்ளூர் மைதானங்களில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்தியர் என்ற பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தை பிடிப்பார்

  • தொடக்க ஆட்டக்காரராக மேலும் ஒரு சதத்தை பதிவு செய்தால், தொடக்க ஆட்டக்காரராக அதிக சதம் விளாசிய இந்தியர் என்ற பெருமையை ரோகித் பெறுவார்


விராட் கோலிக்கான சாதனைகள்:


ஆஸ்திரேலியா தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், கடைசி போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதே ஃபார்மை தென்னாப்ரிக்கா தொடரிலும் கோலி தொடர்வார் என நம்பப்படுகிறது.



  • இன்னும் 64 ரன்களை சேர்த்தால் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர்களில் 10 ஆயிரம் ரன்களை சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார்

  • ஒரே ஒரு அரைசதம் விளாசினால், உள்ளூரில் நடந்த சர்வதேச போட்டிகளில் 100 முறை 50+ ஸ்கோர்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை படைப்பார்

  • இன்னும் 32 ரன்களை சேர்த்தால் இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற ஜாக் காலீஸின் சாதனையை கோலி முறியடிப்பார். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் நீடிக்கிறார்

  • ஒரே ஒரு சதமானது தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்தியர் என்ற பெருமையை கோலிக்கு வழங்கும்