IND Vs SA ODI: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இழப்பிற்கு, ஒருநாள் தொடரில் இந்தியா பழிவாங்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தெ.ஆப்.,வை பழிவாங்குமா இந்தியா?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி முதலில் 2 போட்டிக்ள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதனை 2-0 என கைப்பற்றி 25 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை கைப்பற்றியது. அதைதொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியை தொலைக்காட்சியில் ஹாட் ஸ்டார் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த தொடரின் மூலம், டெஸ்ட் தொடர் இழப்பிற்கு இந்தியா பழிவாங்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய அணி எப்படி?
கேப்டன் கில் மற்றும் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாச் அய்யர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளனர். அதேநேரம், அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் களமிறங்க உள்ளனட். இது இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டை வலுப்படுத்தியுள்ளது.
கே.எல். ராகுல் தலைமையிலான அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் அதிரடியான இளம் நட்சத்திர வீரர்கள் சரியான கலவையில் இடம்பெற்றுள்ளனர். பந்துவீச்சிலும் வலுவான யூனிட் இருப்பதால், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்தியா அசத்தும் என நம்பப்படுகிறது. தென்னாப்ரிக்காவும் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டிருப்பதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளிக்கக் கூடும். இரு அணிகளும் கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடரை இழந்ததால், வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகின்றன.
ரோகித், கோலி கம்பேக்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இழந்தாலும், அதில் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபாரமான ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ஒரு சதம் மற்றும் அரை சதம் விளாசி தொடர்நாயகன் விருது வென்ற ரோகித் சர்மா உள்ளூரிலும் அசத்துவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், கடைசி போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த கோலி அதே ஃபார்மை தொடர்வார் என தெரிகிறது. இந்த இருவரின் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
ராஞ்சி மைதானம் எப்படி?
ராஞ்சி மைதானத்தின் மேற்பரப்பு மிகவும் சமநிலையான விக்கெட்டை வழங்குகிறது, மேலும் பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக அமைகிறது. இங்குள்ள அவுட்ஃபீல்ட் பொதுவாக மெதுவாக இருக்கும், அதாவது பேட்ஸ்மேன்கள் தங்கள் ஷாட்களுக்கு முழு மதிப்பைப் பெற துல்லியத்துடனும் சக்தியுடனும் கேப்பை கண்டுபிடிக்க வேண்டும். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்து எதிரணியை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் இந்த மைதானத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
நேருக்கு நேர்?
இரு அணிகளும் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 94 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 40 முறையும், தென்னாப்ரிக்கா 51 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
உத்தேச ப்ளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், கார்பின் போஷ், கேசவ் மகராஜ், ப்ரீனெலன் சுப்ரயன், நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்